ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக சீன் ஆற்றில் கண்கவர் ஆரம்ப விழா நடைபெறவுள்ளதுடன் அதனை அனைவரும் கண்டு களிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு சீன் ஆற்றில் ஜுலை 26ஆம் திகதி பிரான்ஸ் நேரப்படி இரவு 8.24 மணிக்கு ஒலிம்பிக் ஆரம்ப விழா தொடங்கவுள்ளது.
இந்த ஆரம்ப விழாவின்போது 180 படகுகள் கொண்ட ஊர்வலம் நடைபெறவுள்ளது. அந்தப் படகுகளில் 94 படகுகள் விளையாட்டு வீர, வீராங்கனைகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும்.
இக் காட்சியை 326,000 பேர் கண்டுகளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 86 படகுகள் பாதுகாப்பு குழுவினர், தொழில்நுட்ப குழுவினர் ஆகியோருக்கு பயன்படுத்தப்படுவதுடன் அவசர தேவைகளுக்கும் அவை பயன்படுத்தும் என போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆரம்ப விழாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பது குறித்து ஆரம்பத்தில் கரிசணைகள் இருந்தன, ஆனால் அந்த நாடுகள் தங்களது பிரதிநிதிகள் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளன.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவின்போது பாரிஸ் பிராந்தியம் முழுவதும் 45,000 உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். ஈஃபெல் கோபுரத்திற்கு எதிரே, ஆஸ்டர்லிட்ஸிலிருந்து ட்ரோகாடெரோ வரையிலான ஆறு கிலோ மீட்டர் தூர மிதக்கும் பாதையில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இதேவேளை, விளையாட்டு விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஒரு மில்லியன் மக்கள் ஸ்க்றீன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாரிஸில் நடைபெறும் ஆரம்ப விழாவில் 2,000 மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் 18,000 முதல் 24,000 தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவர்.
ஆரம்ப விழாவின்போது முன்னெப்போதும் இல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருக்கும். அத்துடன் பாரிஸில் 150 கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள வான்வெளி அந் நாட்டு நேரப்படி இரவு 7.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை மூடப்பட்டிருக்கும்.
இக் குறிப்பிட்ட காலப்பகுதியில் சார்லஸ் டி கோல், ஓர்லி சர்வதேச விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் புறப்படவோ தரையிறங்கவோ அனுமதிக்கப்படமாட்டாது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 வீர, வீராங்கனைகள் 32 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 329 தங்கப் பதக்கங்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇