ஆங்கில மொழிமூல கல்விக்காக புதிதாக 2,500 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உள்ளிட்ட 8 அமைச்சர்கள் உள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு குறுகிய கால மற்றும் இடைக்கால கல்வி மாற்றத்துக்கான செயல்முறைகளைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கல்வித் துறையில் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமானதும், விரைவானதுமான நடவடிக்கைகள் குறித்து இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் , தேசிய ஆசிரியர் சபையினை நிறுவுவதற்கான சட்டமூலம் ஒரு மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2000 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைகளில் 8 பாடங்களையும் ஆங்கில மொழியில் கற்பிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 765 பாடசாலைகளில் மாத்திரமே ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆங்கில மொழியில் கல்வியைத் தொடர சமூகத்தில் பெரும் கேள்வி நிலவுவதால் அதற்கான பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த அமைச்சரவை உப குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், குறித்த பணியைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு 2,500 புதிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், ஆங்கில மொழியில் பாடங்களைக் கற்பிக்கக்கூடிய ஆயிரம் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை 3 வருட ஒப்பந்த கால அடிப்படையில் விரைவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேநேரம், தற்போது கல்வியற் கல்லூரிகளில் ஆங்கில மொழியில் கல்வியைப் பெற்று பட்டம் பெறவிருக்கும் 400 ஆசிரியர்களும் இதற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்த வருடம் முதல் அமுலாகும் வகையில், தேசியக் கல்விச் சான்றிதழ்களுக்கு மேலதிகமாக மாணவர்கள் பாடசாலை கல்வியை நிறைவுச் செய்தமைக்கான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇