வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸின் வழிகாட்டுதல்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட FARM TO GATE இணைய செயலியை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கான இணைய வழி சந்தை வாய்ப்புகளுக்கு வசதியளிக்கும் வகையில் FARM TO GATE இணைய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டக்கூடிய ஒரு புதிய முயற்சியாக FARM TO GATE இணைய செயலி தயாரிக்கப்பட்டுள்ளது.
இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரால் செயலியின் பயன்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
விவசாயிகள் மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான சிறந்த விலையையோ அல்லது நன்மைகளையோ பெற்றுக் கொள்வதற்கும் பரந்த சந்தை அணுகு முறைகளை அடைந்து கொள்வதற்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
அங்குரார்பணம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியின் ஊடாக சிறு விவசாயிகள், பண்ணை முயற்சியாளர்கள், வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள், ஏனைய உற்பத்தி முயற்சியாளர்கள் நுகர்வோருடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள் எனவும் இதனூடாக இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் இலகுவான சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்பை அதிகரித்தல், உற்பத்திக்கான நியாயமான விலையை பெற்றுக் கொடுத்தல், பொருளாதாரத்திற்கு வலுவூட்டுதல், நிலைபெறான வளர்ச்சி, நுகர்வோருக்கான வசதிகளை மேம்படுத்துதல், உற்பத்தியாளர்களின் தரவுத்தளத்தை பேணுதல், உற்பத்திகளை பட்டியல் படுத்துதல் மற்றும் நுகர்வோர் கொள்வனவுக்கான கட்டளையிடல், பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்ளுதல், குறுஞ்செய்தி ஊடாக தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறை மற்றும் எதிர்கால ஏற்றுமதி விவசாய திட்டம் உள்ளிட்ட பல தரவுகளை உள்ளடக்கிய பல விடயங்கள் இப் புதிய செயலியில் காணப்படுகிறது.
அந்தவகையில் FARM TO GATE இணைய செயலி இணையதளமாக மாத்திரமன்றி பொருளாதார மாற்றத்திற்கான உந்துதலாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇