அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் செல்ஃபோன் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர், அதைப் பற்றிய புரிதல் முழுமையாக பெறாமல் பயன்படுத்தி, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.
குழந்தைகளிடம் சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நாடுகளில் உள்ள அரசுகள், சமூக நல அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடக கணக்குகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 வயதுக்குட்பட்டோருக்கு தடை
புளோரிடா மாகாண சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மசோதா ஒன்று நிறைவேறியது. 14 வயதுக்குட்பட்டோரின் சமூக ஊடக கணக்குகளை நீக்க வேண்டும். மேலும், 14 முதல் 16 வயதுக்குட்பட்டோர் பெற்றோரின் சம்மதம் பெற்றால் மட்டுமே சமூக ஊடக கணக்கு வைத்திருக்க வேண்டும் உள்ளிட்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தன.
இந்த மசோதாவுக்கு ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வழிகளில் பல இன்னல்களை ஏற்படுத்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரியில் இது சட்டமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் சில சமூக ஊடக நிறுவனங்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் குழந்தைகளை பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பிற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விவாதங்களும் இணையத்தில் நடைபெற்று வருகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇