டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக பொருளாதாரத்தை மாற்ற முடியும்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI ) உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தனியார் விடுதியில் 26.03.2024 அன்று ஆரம்பமான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவும் அனுபவமும் கொண்ட பல இந்திய மற்றும் இலங்கை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.

புதிய சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக இலங்கையின் பொருளாதாரத்தை மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ;

நாட்டின் பொருளாதார மாற்றுத் திட்டத்தை இலகுபடுத்தும் வகையில் புதிய நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். தகவல் தொழில்நுட்ப சபை போன்ற தற்போதுள்ள கட்டமைப்புகளில் இருந்து விலகி, டிஜிட்டல் மாற்றத்திற்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI மையம்) உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விவசாயத்தை நவீனமயமாக்குவது, வறுமையை நிவர்த்தி செய்வது மற்றும் கல்வி முறையை சீர்திருத்துவது போன்றவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வறுமையைக் குறைக்கும் தேசிய இலக்குடன் அரசாங்கம் செயற்படுகிறது. 2035 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்களில் வறுமை 10% ஐ தாண்டாது என்பதை உறுதிப்படுத்துவது எமது நோக்கமாகும்.

இந்த பொருளாதார நோக்கங்களை அடைவதில் வலுவான நிறுவன கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் துல்லியமான தரவுகளை சேகரிப்பது முக்கியமானது. இந்தத் தரவுகள் ஊடாக கல்வி, சுகாதாரம் மற்றும் வருமான மட்டங்கள் போன்ற பல்வேறு பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை அளிக்க வேண்டும்.

உத்தேச முகவர் நிறுவனத்தை செயல்படுத்தும் வகையில் இந்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் அதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியம் ஒரு பாரிய வளர்ச்சிப் பிராந்தியமாக உருவாகி வருவதால், இலங்கை போட்டிப் பொருளாதாரமாக மாறுவதற்கு இந்த சட்டவாக்க மற்றும் கொள்கை கட்டமைப்பு மிகவும் முக்கியமானது.

இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாடசாலை மற்றும் உயர்கல்வி மட்டத்தில் கல்வி முறைமை பலப்படுத்தப்பட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துவது பிரதான திட்டமாகும். மேலும் ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் அனைத்து பாடசாலையையும் இத் திட்டத்தில் ஈடுபடுத்தி பல்கலைக்கழகங்கள் வரை இதனை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட நாம் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) கிளையை எமது நாட்டில் நிறுவுவதற்கும் அவர்களின் நிபுணத்துவ அறிவைப் பயன்படுத்தி இரண்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட மூன்று பல்கலைக்கழகங்களை இங்கு முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொருத்தமான மூலோபாயங்களைப் பின்பற்றி இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு இந்திய நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டங்களை செயல்படுத்த கூட்டு ஒத்துழைப்பு அவசியம். 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையை தயார்படுத்துவதில் நவீனமயமாக்கலைத் தழுவ வேண்டிய அவசரத் தேவை உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்;

DIGIECON 2030 வீதி வரைபடத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், வலையமைப்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளை (DFS) மேம்படுத்துவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது. டிஜிட்டல் ஆட்சி எனும் கருத்தை வளர்ப்பதற்கும் இணைய பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளவும் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்நுட்பத் திட்ட மேம்பாட்டிற்கான தளத்தை தயார் செய்து ஜூன் 25 ஆம் திகதி உலகளாவிய முதலீட்டு மாநாடொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் முன்னேற்றம் கண்டுவரும் தொழில்நுட்ப சூழலில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக மாற்றத்தை தழுவி நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு பங்களிக்குமாறு முதலீட்டாளர்களை கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, காவிந்த ஜயவர்தன, மயந்த திஸாநாயக்க, சரித ஹேரத், மொஹமட் முஸம்மில், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மசிறி குமாரதுங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects