பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று (16.04.2024) ஏற்றப்படவுள்ளது.
இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது.
கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்றும் நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது.
பண்டைய பெண் பாதிரியார்களாக உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது.
2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார்.
ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது.
ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார்.
கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர்.
ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாவதாக தீபத்தை ஏந்திச் செல்வார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇