ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.
சர்வதேச மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம். ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே ஒற்றுமையையும், தோழமையையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அடையும் பொருட்டு அவர்களது கூட்டு வலிமையை கொண்டாடுவதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தை அமைக்கும் பொருட்டு வாதிடுவதற்கான ஒரு தளமாக அமைகிறது.
சர்வதேச மகளிர் தினம் 2024 இன் கருப்பொருள் :
சர்வதேச மகளிர் தினம் 2024 இன் கருப்பொருளானது பெண்களில் முதலீடு செய்க: முன்னேற்றத்தை விரைவுப்படுத்துக (Invest in Women: Accelerate Progress,’ targeting economic disempowerment) என்பதாகும். இது பொருளாதார வலுவற்ற நிலையைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
1975-ஆம் ஆண்டில் யுனைடெட் நேஷன்ஸ் மார்ச் 8 ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. எனினும் இந்த நாள் முதல்முறையாக யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 1911 இல் கொண்டாடப்பட்டது.
1908 ஆம் ஆண்டில் கார்மெண்ட்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் நியூயார்க் நகர தெருக்களில் நடந்து நல்ல ஊதியம், குறைவான வேலை நேரம் மற்றும் ஓட்டு போடும் உரிமைக்காக போராடினர். இதுவே சர்வதேச மகளிர் தினத்திற்கான ஒரு அடிப்படை யோசனையாக அமைந்தது. இந்தப் போராட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த சோசியலிஸ்ட் கட்சி வழி நடத்தியது.
மகளிர் தினத்தின் வரலாறு
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) கூற்றுப்படி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளில் இருந்து சர்வதேச மகளிர் தினம் தோன்றி இருக்கிறது. 1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் நினைவாக 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பெண்கள் கடுமையான வேலை சூழலுக்கு எதிராக போராடினர்.
1945ல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் முதல் சர்வதேச ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பின்னர் மார்ச் 8, 1975 அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1977ல் ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை ஏற்று சர்வதேச மகளிர் தினம் ஒரு உலகளாவிய விடுமுறையாக மாறியது.
மகளிர் தினத்தின் முக்கியத்துவம்
பெண்களின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாலினச் சார்பு மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமத்துவமின்மை, பாலின அடிப்படையிலான வன்முறை, கல்வி மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் தினம் சிறந்த அடித்தளமாகும். பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளை நோக்கிச் செயல்படுவதற்கும், ஏற்படுத்த வேண்டியை முன்னேற்ற பாதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் இது சரியான தருணமாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇