2023 ஆண்கள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாது நாளான இன்று பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. ஹைதராபாத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இவ்விரு அணிகளும் 2 உலகக் கிண்ணப் போட்டிகள் உட்பட 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. அவை அனைத்திலும் பாகிஸ்தான் அணியே வெற்றியீட்டியது.
1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான அணி பாகிஸ்தான், இம்முறையும், பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, பலமான அணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 7 வருடங்களின் பின் இன்று இந்திய மண்ணில் முதல் தடவையாக உத்தியோகபூர்வ போட்டியொன்றில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. அவ்வணி இறுதியாக இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு இருபது20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருந்தது.
அதேவேளை, 2011 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக, ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது. ஸ்கொட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தெரிவான ஒரேயொரு ஐ.சி.சி. இணை அங்கத்துவ நாட்டின் அணியாகவுள்ளது.
ஸிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இரண்டாமிடம் பெற்றதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய டெஸ்ட் அந்தஸ்துடைய அணிகளை மீறி, உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை நெதர்லாந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது