ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான 27.04.2024 அன்று இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் உட்பட 3 பதக்கங்கள் கிடைத்தது.
இவ் மூன்று பதக்கங்களும் தொடர் ஓட்டப் போட்டிகளிலேயே கிடைத்தது.
ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை 39.81 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.
அப் போட்டியில் ஹொங்கொங் (39.67 செக்.) தங்கப் பதக்கத்தையும் இந்தியா (40.01 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இந்த நேரப் பெறுதியானது 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கான புதிய 20 வயதுக்குட்பட்ட தேசிய சாதனையாகும். நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் நிலைநாட்டிய 40.32 செக்கன்கள் என்ற சாதனை இதன் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டித்தன்மையை ஏற்படுத்திய ஆண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 09.48 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இப் போட்டியில் தாய்லாந்து (3:09.33 செக்.) தங்கப் பதக்கத்தையும் இந்தியா (3:09.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.
பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஒரு கட்டத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை கடைசியில் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.
இலங்கை பெண்கள் அணி அப் போட்டியை 3 நிமிடங்கள், 46.20 செக்கன்களில் நிறைவு செய்தது.
இந்தியா (3:41.50) தங்கப் பதக்கத்தையும் கஸக்ஸ்தான் (3:45.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.
இலங்கைக்கு கிடைத்த 3 பதக்கங்களுடன் மொத்தம் 2 வெள்ளிப் பதக்கங்களும் 3 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.
போட்டியின் ஆரம்பத் தினத்தன்று பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பெண்கள் அணித் தலைவி நெத்மிகா மதுஷானி ஹேரத் (13.01 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டாம் நாளன்று 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் (3:28.18 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை வென்றிருந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇