சீனாவினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவி அடிப்படையில் மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறித்த திட்டம் கடந்த 02ஆம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, கடற்றொழிலில் ஈடுபடும் 29 ஆயிரத்து 57 மீன்பிடி படகுகளுக்கு இவ்வாறு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, முதல் கட்டத்தில் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, தங்காலை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய 15 கடற்றொழில் மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களிலுள்ள 97 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.