22-04-2023 அன்று மட்டக்களப்பைச் சேர்ந்த இயக்குநர் ஜேக்கப் ஜெரோஷன் இன் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான “OSMODEUS” (இச்சையின் அரக்கன்) எனும் குறும்படம் திரையிடப்பட்டு அதனைப்பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்குறும்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றிருப்பதுடன் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற “கேன்ஸ்” திரைப்படவிழாவின் போது திரையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் உட்பட பல கலைஞர்கள், சினிமா இரசிகர்கள் கலந்துகொண்டு பல ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஜெரோஷன், தங்கவேல் சக்தியலிங்கம், சிந்துஜன், சபேஷன், தேவராஜன் மற்றும் களுமுந்தன்வெளி மக்களின் நடிப்பிலும், தர்ஷன் நந்தகுமாரின் ஒளிப்பதிவிலும், சஞ்சித் லகஷ்மனின் இசையிலும் உருவாக்கப்பட்ட இக்குறும்படம் Bad-dot studios PVT LTD நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படப்பிடிப்பிற்காக மயானத்தில் கூடாரம் அமைத்து பல நாட்கள் அங்கேயே தங்கியிருக்க நேர்ந்ததாகவும், இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் இப்படம் உருவாக்கப்பட்டதாகவும் இயக்குநர் ஜெரோஷன் தெரிவித்தார்.