2024.05.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் வருமாறு:
- வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான வனசீவராசிகள் சுற்றுலா விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்
வனஜீவராசிகள் திணைக்களத்தால் தற்போது முகாமைத்துவப்படுத்தப்பட்டு வரும் 52 சுற்றுலா விடுதிகள் காணப்படுவதுடன், அவற்றின் மூலம் மிகவும் தரப்பண்பான சேவைகளை வழங்குவதற்காக குறித்த விடுதிகளின் பௌதீக வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பணிகளுக்கு சுயமாக முன்வந்து ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்ற தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொண்டு குறித்த சுற்றுலா விடுதிகள், தரப்பண்புடன் கூடிய சேவைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தாவரங்கள் மற்றும் விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாகாத வகையில் பௌதீக அபிவிருத்திகளை மேற்கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரலைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கிணங்க தெரிவு செய்யப்படும் தரப்பினர்கள் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2024 ஆம் ஆண்டில் சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இலங்கையில் நடாத்துதல்
வெளிநாட்டு செலாவணி ஈட்டலை அதிகரித்தல், உறுப்பு நாடுகளுக்கிடையில் இலங்கையின் தெங்கு தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கும், தெங்குத் தொழிற்துறையிலுள்ள பிரதான பங்குதாரர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக சர்வதேச தெங்கு சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் தெங்குத் தொழிற்துறையில் தனியார் நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் குறித்த கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்களின் சந்திப்பை இவ்வாண்டில் நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி போன்ற நிறுவனங்களில் செலுத்த வேண்டியுள்ள நியதிச்சட்டக் கொடுப் பனவுகளை செலுத்துதல்
இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி போன்ற நிறுவனங்களில் செலுத்த வேண்டியுள்ள நியதிச்சட்டக் கொடுப்பனவுகள் சரியான வகையில் செலுத்தப்படாமையால் பல பிரதேசங்களில் 2,000 இற்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. குறித்த நியதிச்சட்ட கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அந்தந்த நிறுவனங்களின் வருமானம் போதியளவில் இன்மையால், அதற்குத் தேவையான தொகையை கடனாக திறைசேரியால் வழங்கப்பட்டு, குறித்த நிறுவனங்களின் வருமானங்களிலிருந்து கடன் தொகையை தவணை அடிப்படையில் மீள் செலுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய ஊழியர் சேமலாப நிதியின் மொத்தப் பங்களிப்புத் தொகையை செலுத்தி பின்னர், குறித்த தொகைக்குரிய செலுத்த வேண்டிய மிகைக் கட்டணத்தை கழிவிடுவதற்கும், 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு இயலுமை உண்டு. அதற்கமைய, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி போன்ற நிறுவனங்களில் செலுத்த வேண்டியுள்ள நியதிச்சட்டக் கொடுப்பனவுகளை செலுத்துவதற்குத் தேவையான தொகையை திறைசேரி மூலம் பெற்றுக் கொள்வதற்கும், குறித்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட்ட பின்னர் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய மிகைக்கட்டணத்திலிருந்து கழிவிடக்கூடிய உயர்ந்தபட்ட அளவைக் கழிவிடுவதற்கும் ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- சமுர்த்தி சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய மட்ட சங்கங்கள் அரச கணக்காய்வின் கீழ் கொண்டு வரல்
நுண்நிதி வசதிகளை ஊக்குவிப்பதற்காக 1,092 சமுர்த்தி சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் 335 சமுர்த்தி சமுதாய மட்ட வங்கிச் சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இயங்குகின்றன. சமுர்த்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய மட்ட சங்கங்கள் ஆண்டுதோறும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவால் கணக்காய்வு செய்யப்படுவதுடன், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வுக்கு உட்படுதல் அவசியமென சமுர்த்தி அபிவிருத்திச் சட்ட ஏற்பாடுகளில் குறிப்பிடப்படவில்லை. சமுதாய மட்ட வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய மட்ட சங்கங்கள் அரச கணக்காய்வு அலுவலகத்தால் கணக்காய்வு செய்யப்படுவதன் மூலம் அவற்றின் செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையாகப் பேணுவதற்கும், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தை அதிகரிப்பதற்கும் இயலுமை கிட்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விதித்து 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டத்தின் திருத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சமுர்த்தி சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும், அதற்காக, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமை
வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையின் கீழ் ஓய்வு பெறுவதற்கு 267 ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, அரச தொழில்முயற்சிகளில் மேலதிக ஊழியர்களை சுய ஓய்வூதிய முறைமையின் கீழ் ஓய்வு பெறச் செய்தல் தொடர்பாக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைகளுக்கமைய, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியை ஒன்றிணைப்பதற்கு கட்டாய ஓய்வு இழப்பீட்டு முறைமையை அமுல்படுத்துவதற்கும், முன்மொழியப்பட்டுள்ள கட்டாய ஓய்வூதிய உத்தேச முறைமையை அமுல்படுத்துவதற்கும், இரண்டு உரக் கம்பனிகளின் நிதியிலிருந்து 844 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கம்பஹா பியகம் பொது மருத்துவமனை மற்றும் சிறுவர் மருத்துமனைக் கட்டுமானங்களுக்கு நிதியொதுக்கீடு வழங்கல்
கம்பஹா மாவட்டத்தில் சுகாதார சேவைகளுக்கான கேள்வி நாள்தோறும் அதிகரித்து வருவதுடன், குறித்த மாவட்டத்தின் சுகாதார சேவைகள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, அரச – தனியார் பங்குடமை அணுகுமுறையின் கீழ் பொது மருத்துவனை மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சிறுவர் மருத்துவமனையைத் தாபிப்பதற்கும், உத்தேச மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக பியகம பிரதேச செயலகப் பிரிவில் மில்லகஹவத்த மற்றும் தெல்கஹவத்த ஆகிய 02 காணித் துண்டுகளில் (07 ஏக்கர் 03 றூட்) அரச மதிப்பீட்டின் பிரகாரம் கையகப்படுத்துவதற்கு 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கான நிதியை வழங்குவதற்கு Group Hong Kong International Limited விருப்பம் தெரிவித்து முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, குறித்த மருத்துவமனையை அமைப்பதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த நிறுவனத்திற்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் அவர்கள் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - 2018 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
பொருளாதார நிலைமாற்ற சட்டமூலத்தைத் தயாரிக்கும் போது 2018 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டங்களில் விளைவாய்ந்த விடயங்களை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சட்டமூலம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க, 2018 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டத்திற்கான திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமித்தல்
அரச சேவையில் பல்வேறு ஊழியர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அந்தந்த தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த சம்பள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்புக்களுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியே மூலமாக அமையும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇