நடப்பாண்டிற்கான வருடத்திற்கான சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்ய விழிப்புணர்வு பேரணி 12.06.2024 அன்று இடம்பெற்றது.
“நண்பா போதைக்கும் புகைத்தலிற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் மகிழூர்முனை சக்தி வித்தியாலய முன்றலில் ஆரம்பமான பேரணியில் புகைத்தல் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதக விளைவுகளை குறிக்கும் பதாதைகளை ஏந்தி கோசங்களையெழுப்பிய வண்ணம் மகிழூர் பொது மைதானத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனின் நெறியாள்கையில் ‘ஆடல் நிலம்’ வழங்கிய “விரல் இடுக்கில் கசியும் உயிர்” எனும் தலைப்பிலான புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு வீதி நாடகமானது கலந்துகொண்டோர் அனைவரினதும் வரவேற்பை பெற்றது.
இந்த பேரணியில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் குறித்த வீதி நாடகமானது பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றதுடன், இதில் பங்குகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇