எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ், உலக சுற்றாடல் தினத்தைக் சிறப்பிக்கும் முகமாக இலங்கை, மாலைதீவு, இந்தியா, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள அதன் காணிகளில் 2,000 மரக்கன்றுகளை நடுகை செய்யவிருப்பதன் மூலம் பேண்தகு தன்மைக்கான அதன் இடைவிடாத அர்ப்பணிப்பை மீள எடுத்துக்காட்டியுள்ளது.
இலட்சியபூர்வமான இந்த முன்முயற்சி, சுற்றாடல் பாதுகாப்பில் எயிற்கின் ஸ்பென்ஸ் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றாடல் மேம்பாட்டுக்காக உலகளாவிய ரீதியில் பொறுப்புணர்வு வாய்ந்த நடவடிக்கைகளுக்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பாகவும் அமைகிறது.
இலங்கையில் எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸுக்குச் சொந்தமான ஹெரிட்டன்ஸ் கந்தலம, ஹெரிட்டன்ஸ் அஹுங்கல, ஹெரிட்டன்ஸ் டீ ஃபக்டரி, ஹெரிட்டன்ஸ் ஆயுர்வேத, செரண்டிடோ ஹெரிட்டன்ஸ் நீர்கொழும்பு, துர்யா களுத்துறை, அமெத்திஸ்ட் ரிசோட், ஏர்ல்ஸ் ரிஜென்ஸி ஆகியவற்றின் காணிகளில் மொத்தம் 1,730 மரக்கன்றுகள் நடப்படும். இவற்றுள் எயிற்கின் ஸ்பென்ஸின் பிரதான ஹொட்டேலாகிய ஹெரிட்டன்ஸ் கந்தலமவிலேயே ஆகக் கூடுதலாக 780 மரங்கள் நடப்படவிருக்கின்றன. இதனைத் தவிர, இம்மாத பிற்பகுதியில் இடம்பெறவிருக்கும் இந்த ஹொட்டேலின் 30ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக 211 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட காணியில் விரிவான உயிரினப் பாதுகாப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
மாலைதீவில் ஹெரிட்டன்ஸ் ஆராஹ், அடாரன் பிரெஸ்டீஜ் வாடூ, அடாரன் செலெக்ட் மீதுப்பாரு, அடான் செலெக்ட் ஹுதுரன் ஃபூஸி, அடாரன் கிளப் ரண்ணல்ஹி போன்ற ரிசோட்களின் வளவுகளில் 135 மரங்கள் நடப்படவிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக, செலெக்ட் ஹுதுரன் ஃபூஸி ரிசோட், உலக சுற்றாடல் தினத்துடன் இணைந்ததாகவும் கடலோரப் பாறைகளைப் பாதுகாக்கும் முயற்சிக்கு உதவியாகவும் 400க்கு மேற்பட்ட Coralகளின் நடுகையைப் பொறுப்பேற்றுள்ளது.
ஓமானிலுள்ள அல் ஃபலாஜ் ஹொட்டேல் 75 மரங்களையும் இந்தியாவின் சென்னையிலுள்ள துர்யா ஹொட்டேல் 50 மரங்களையும் நடுவதன் மூலம் தமது பங்களிப்பை செய்யவிருக்கின்றன. மரநடுகையின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்துக்கு அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை வளர்ப்பதற்கான இந்த முயற்சிகளில் ஹொட்டேல் ஊழியர்கள், விருந்தினர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் பங்குபற்றுவார்கள்.
மரங்களை நட்டு வளர்த்தல் அநேக சுற்றாடல் நன்மைகளைத் தரும் என்பதில் ஐயமில்லை. காபன் தணிப்பு, வளித்தரத்தின் மேம்பாடு, பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடத்தை வழங்குவதன் மூலம் உயிரினப் பல்வகைத் தன்மைக்கான ஆதரவு, உயிரினப் பல்வகைத் தன்மையின் ஊக்குவிப்பு, மண்வளம் மற்றும் நீர் வளத்தின் பாதுகாப்பு என்பன அத்தகைய நன்மைகளுள் அடங்கும்.
எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் நீண்ட காலமாகவே அதன் பேண்தகு தன்மை தொடர்பான முன்மாதிரிக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிக்கனமான சக்திப் பாவனை மற்றும் சிறந்த கழிவுப்பொருள் முகாமைத்துவம் முதல் சமூகத்தினரை ஈடுபடுத்துதல் மற்றும் உயிரினப் பல்வகைத் தன்மையின் பாதுகாப்பு வரை நிறுவனம் அதன் சகல செயற்பாடுகளிலும் சுற்றாடலுக்கு நலமான நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளது.
குறிப்பாக, ஹெரிட்டன்ஸ் கந்தலம இந்த அர்ப்பணிப்புக்குச் சான்றாக அமைந்துள்ளது.
இயற்கைச் சூழலுடன் இயல்பாக இணைந்திருப்பதுடன் பேண்தகு சுற்றுலாத் துறையின் அளவுகோல்களை நிர்ணயித்துச் செயற்படும் இந்த ஹொட்டேல், Green Globe சான்றிதழ் பெற்ற உலகின் முதலாவது இக்கோ-ரிசோட் ஆகவும் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே LEED சான்றிதழ் பெற்ற முதலாவது ஹொட்டேல் ஆகவும் விளங்குகின்றது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் மேற்கொள்ளும் மரநடுகை இயக்கம், பேண்தகு தன்மையான விருந்தோம்பல் துறையில் அது வகிக்கும் தலைமைத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஊழியர்கள், விருந்தினர்கள் மற்றும் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் மூலம் சுற்றாடல் பாதுகாப்புக்கு நிறுவனம் செய்யும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஹெரிட்டன்ஸ் கந்தலம ஹொட்டேல், மூன்று தசாப்தகால விருந்தோம்பல் தரச்சிறப்பினை விரைவில் கொண்டாடவிருப்பது எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் தனது எதிர்கால முயற்சிகளில் பேண்தகு தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அடிகோடிட்டுக் காட்டுகிறது.
*எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் பற்றி
எயிற்கின் ஸ்பென்ஸ் என்பது இலங்கையின் மாபெரும் கூட்டு நிறுவனங்களில் ஒன்றான எயிற்கின் ஸ்பெனடஸ் பி.எல்.சி.யின் ஒரு பகுதியாகும். எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல்ஸ் அதற்குச் சொந்தமான 17 ஹொட்டேல்கள் மற்றும் ரிசோட்களை இலங்கை, மாலைதீவு, ஓமான், இந்தியா ஆகிய நாடுகளில் நடத்துகிறது. நிறுவனத்துக்குச் சொந்தமான ஹொட்டேல்கள் ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ், அடாரன் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ், துர்யா ஆகிய வர்த்தகப் பெயர்களில் இயங்குகின்றன. பிரபல கட்டடக்கலை மேதை ஜெப்ரி பாவாவால் இலங்கையில் வடிவமைக்கப்பட்ட ஆகக்கூடிய ஹொட்டேல்களின் பாதுகாவலனாக ஹெரிட்டன்ஸ் ஹொட்டேல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் விளங்குவதால் அதன் கட்டடக்கலை சிறப்பும் தனித்துவம் வாய்ந்ததாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇