மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி இலக்குகளை உரியமுறையில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டம் 16/06/2024 அன்று நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் , பாராளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மடு தேவாலயத்திற்கு செல்வோருக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் குறித்த பகுதியில் உள்ள வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன் மன்னார் வைத்தியசாலைக்கான CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇