பாரிஸ் ஒலிம்பிக்குக்கு 4 இலங்கையர்கள் தகுதி அடிப்படையில் தெரிவு – இலங்கை ஒலிம்பிக் குழு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் சார்பில் 6 போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ள நிலையில், இவர்களில் நால்வர் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறந்த பெருமைக்குரிய விடயமாகும் என இலங்கை ஒலிம்பிக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக் பங்குபற்றவுள்ள இலங்கையர்களின் விபரங்களை, ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை ஒலிம்பிக் குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

3 மெய்வல்லுநர்கள், இரு நீச்சல் போட்டியாளர்கள், பட்மின்டன் வீரர் ஒருவர் ஆகியோர் இலங்கை போட்டியாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விரேன் நெத்தசிங்க (ஒற்றையர் பட்மின்டன்), தருஷி கருணாரட்ன (800 மீற்றர் ஓட்டம்), நடீஷா டில்ஹானி லேக்கம்கே (ஈட்டி எறிதல்), அருண தர்ஷன (400 மீற்றர் ஓட்டம்), கைல் அபேசிங்க (100 மீற்றர் ப்றீஸ்டைல் நீச்சல்), கங்கா செனவிரட்ன (100 மீற்றர் மல்லாக்கு நீச்சல்) ஆகியோரே இப்போட்டியாளர்கள் ஆவர்.

ஒற்றையர் பட்மின்டனில் தற்போது 74 ஆவது இடத்திலுள்ள விரேன் வெத்தசிங்க, பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர்களில் மிக இளமையானவர் ஆவார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதலாவது வீரரும் அவரே.

நடீஷா தில்ஹானி லேக்கம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கு தகுதிபெற்ற 32 பேரில் தரவரிசையில் 25 ஆவது இடத்தில் உள்ளார். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் பங்குபற்றவுள்ள இலங்கையர்களில் உலகத் தரவரிசையில் மிகவும் முன்னிலையிலுள்ள போட்டியாளர் தில்ஹானி ஆவார்.

ஆசிய விளையாட்டு விழாவின் 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தருஷி கருணாரட்ன, ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 48 போட்டியாளர்களில் 44 ஆவது இட்தில் உள்ளார். ஆடவர் 400 மீற்றர் ஓட்டத்துக்கு தகுதி பெற்ற 48 போட்டியாளர்களில் 47 ஆவது இடத்தில் உள்ளார். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக்குக்கு பின்னர் 400 மீற்றர் போட்டிக்க தகுதி பெற்ற முதல் இலங்கைர் அருண தர்ஷன ஆவார்.

நீச்சல் போட்டியாளர்களான கங்கா செனரவித்ன வேர்ல்ட் அக்வாட்டிக்ஸ் தரவரிசையில் 688 புள்ளிகளையும், கைல் அபேசிங்க 776 புள்ளிகளையும் பெற்றுள்ள நிலையில், வைல்ட் கார்ட் மூலம் பாரிஸ் 2024 ஒலம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கொடி ஏந்திச் செல்லும் விரேன், தில்ஹானி

ஆரம்ப வைபவத்தில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பாக்கியம் நடீஷா தில்ஹானி லேக்கம்கே மற்றும் விரேன் நெத்தசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து 6 போட்டியாளர்களுடன் 8 அதிகாரிகளும் பாரிஸுக்குச் செல்கின்றனர். அத்துடன் இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக சந்தன லியனகே விளங்குகிறார்.

இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமும், ஆரம்ப வைபவத்துக்கான உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக லோவி சிலோன் நிறவனமும் விளங்குகின்றன.

இந்நிகழ்வில் இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் உரையாற்றுகையில், கடந்த ஒலிம்பிக் போட்டியில் 9 இலங்கையர்கள் பங்குபற்றிய போதிலும், அவர்களில் 8 பேர் வைல்ட் கார்ட் மூலம் பங்குபற்றினார். இம்முறை 2 வைல்ட் கார்ட்களுடன், 4 பேர் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிகவும் பெருமைக்குரியது என்றார்.

பிரெஞ்சு தூதரகத்தின் கலாசார செயலாளர் ஒலிவியா பெல்மோர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ‘பிரான்ஸைப் பொறுத்தவரை இந்த ஒலிம்பிக் ஒரு விளையாட்டுப் போட்டி மாத்திரமல்ல, அது ஓர் உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்கும். பிரான்ஸின் பாணி மற்றும் வாழ்க்கை முறையை உலகுக்கு காண்பிப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை ஒலிம்பிக் விளையாட்டு விழா வழங்கும்.

பாரிஸ் 2024 ஓலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகள் 200 தூதுக்குழுக்களுடன் 120 நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் 16 மில்லியன் பேரை வரவேற்கவுள்ளன.

ஒலிம்பிக்கில் சுமார் 15,500 போட்டியாளர்களில் பங்குபற்றுவர் அவர்களில் 50 சதவீதமானோர் பெண்களாக இருப்பர். பராலிம்பிக்கில் 4,400 பேர் பங்குபற்றுவர். இரு விளையாட்டு விழாவிலும் 800 இற்கும் அதிகமான போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக்கில் புதிய போட்டிகள் உட்பட 329 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த ஒலிம்பிக்குகளில் 4,500 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.’ என்றார்.

விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமால் பெர்னாண்டோ உரையாற்றுகையில், விளையாட்டுத்துறையில் ஒலிம்பிக்கின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன், இப்போட்டிகளுக்கு தகுதி பெற்ற 6 இலங்கையர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இப்போட்டியாளர்கள் விளையாட்டில் மாத்திரமல்லாமல் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா உரையாற்றுகையில், ‘எவருக்கும் ஒலிம்பிக்கில் பங்குபற்றுவது பெரும் கனவாக இருக்கும். உலகிலுள்ளவர்களில் 15,500 பேர் மாத்திரமே பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளனர். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் எமது 9 போட்டியாளர்கள் பங்குபற்றினர். லொஸ்ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் குறைந்தபட்சம் 20 மெய்வல்லுநர்கள் பங்குபற்ற வேண்டும் என்பது எமது இலக்கு’ என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects