கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்ட தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு, மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் மெத்திக்க ஜயசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள், போட்டியை முன்னின்று நடத்தும் இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் இப் போட்டி நாளை (10.07.2024) ஆரம்பமாகி 13ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இப் போட்டியில் சம்பியனாகும் நாடு 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
கூடைப்பந்தாட்ட விளையாட்டை பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மெத்திக்க ஜயசிங்க, பல்வேறு வயதுப் பிரிவுகளில் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணித் தலைவராக பல சம்பியன் பட்டங்களை வென்றுகொடுத்துள்ளதுடன் அதிசிறந்த வீரர் விருதுகளையும் தனதாக்கி பெருமை சேர்த்துக்கொண்டுள்ளார்.
இலங்கை பாடசாலைகள் கூடைபந்தாட்ட சங்கத்தினால் 2022இல் நடத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட ஏ பிரிவு பாடசாலைகள் கூடைப்பதாட்டப் போட்டி, 2024இல் நடத்தப்பட்ட 20 வயதுக்குட்பட்ட ஏ பிரிவு பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டி ஆகிவற்றிலும் அவர் அதிசிறந்த வீரராகத் தெரிவாகியிருந்தார்.
இராணுவத் தளபதி சவால் கிண்ண கூடைப்பதாட்டப் போட்டியில் சம்பியனான கொழும்பு அணியிலும் மெத்திக்க இடம்பெற்றிருந்தார்.
அவரது கல்லூரியைச் சேர்ந்த மேலும் நான்கு வீரர்கள் அணியில் இடம்பெறுகின்றனர்.
அணியின் உதவித் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி வீரர் எவீன் சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் டியொன் ஸினோ தேவகுமார், புனித சூசையப்பர் கல்லூரி வீரரகளான டெரன் பேர்னார்ட், ஜுட் ஆகாஷ் ஆகிய மிகச் சிறந்த வீரர்கள் மூவர் 18 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர்.
அணியின் பயிற்றுநர்களான ரொஷான் ரந்திம, ஷேன் டெனியல்ஸ் ஆகியோரும் அணி முகாமையாளர்களாக ப்ரசாத், ஹஷேந்த்ர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
மெத்திக்க யுமேத் ரன்சன ஜயசிங்க – தலைவர், டெரன் பேர்னார்ட், சமிந்து விஜேசிங்க, ஜூட் ஆகாஷ், ஏட்ரியன் விஜயவர்தன (ஐவரும் புனித சூசையப்பர் கல்லூரி), எவீன் சேனாரத்ன (உதவித் தலைவர், டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி), திலுக் சமரவிக்ரம (மெல்பர்ன் ஹை ஸ்கூல்), சுதாம் லியனகே (ஆனந்த கல்லூரி), நேதன் அனுஹாஸ் ஜயசேகர (வெஸ்லி கல்லூரி), தாருக்க பண்டார ஜயசுந்தர (றோயல் கல்லூரி), தெவ்னில விக்ரமஆராச்சி (வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலை).
பதில் வீரர்கள்
தீக்ஷன மாலன் பெர்னாண்டோ (வெஸ்லி கல்லூரி), தஹான் வைத்யரத்ன (வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலை), சிஹாத் கலட்டுவகே (வெரிபே, மெக்கிலொப் கத்தோலிக்க கல்லூரி), ரனிக் டேமியன் டி சில்வா (எல்.பி.எவ். பயிற்சியகம்).
போட்டி விபரங்கள்
10ஆம் திகதி: மாலைதீவுகள் எதிர் பங்களாதேஷ்
இலங்கை எதிர் இந்தியா
11ஆம் திகதி: இந்தியா எதிர் மாலைதீவுகள்
பங்களாதேஷ் எதிர் இலங்கை
12ஆம் திகதி: பங்களாதேஷ் எதிர் இந்தியா
இலங்கை எதிர் மாலைதீவுகள்
ஒவ்வொரு நாளும் முதலாவது போட்டி பிற்பகல் 4.00 மணிக்கும் 2ஆவது போட்டி மாலை 6.00 மணிக்கும் நடைபெறும்.
13ஆம் திகதி: அரை இறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன நடைபெறும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇