ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனில் இதுவரை 60 மில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சபை தெரிவித்துள்ளது.
இந்த கடன் கடந்த வருடம் முதல் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த கடன் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உடன்படிக்கையின் கீழ், தேயிலை ஏற்றுமதியின் மூலம் கனியவளத்துறைக்காக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில், 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இது 2023ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.