தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் இலங்கைக்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17.07.2024) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
(வளிமண்டலவியல் திணைக்களம்)
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇