மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை….
எம்மில் சிலருக்கு ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். ஆனால் சிலருக்கு இத்தகைய சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு அடிக்கடி அல்லது மீண்டும் மீண்டும் வரக்கூடும். இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது மிக சிறிய அளவிலேயே வெளியேறுதல், வெளியேறும் சிறுநீரின் நிறம் மாற்றமடைந்திருத்தல், சிறுநீர் மணம் மாறி இருப்பது, அந்தரங்க உறுப்பினைச் சுற்றி இருக்கும் எலும்பு பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, அசௌகரியத்தை உணர்தல், இடுப்பு வலி போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும், சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு என்பது சிறுநீரக மண்டலத்தில் உள்ள சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் என எதன் பாதிப்பின் காரணமாகவும் ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும். இதனால் எப்போதும் சிறுநீர் கழிக்கும் பகுதியை முழுமையான சுகாதாரத்துடன் பேண வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதன் போது வைத்தியர்கள் சில பரிசோதனைகளை குறிப்பாக சிறுநீர் பரிசோதனை மற்றும் சைட்டோஸ்கோப் எனப்படும் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பினை துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
இதன்போது நாளாந்தம் அருந்தும் குடிநீரின் அளவு குறித்து வைத்தியர்கள் பரிந்துரைத்திருப்பார்கள். அவரது பரிந்துரையை தொடர்ந்து புறக்கணித்து வந்தாலோ அல்லது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ அல்லது உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றாலோ அல்லது உடலியல் கோளாறுகளுக்காக நீங்கள் ஸ்டீராய்டு மருந்தினை தொடர்ச்சியாக பாவித்துக் கொண்டிருந்தாலோ உங்களுக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
மேலும், இத்தகைய பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உடலுறவின் போது பாவிக்கும் ஆணுறையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நிலையில் இவர்கள் இத்தகைய பாதிப்பினை தொடக்க நிலையிலே கண்டறிந்து, வைத்திய நிபுணர்களை சந்தித்து அவர்களின் முறையான ஆலோசனையையும், சிகிச்சையும் பெற்றால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற இயலும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇