தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 27/08/2024 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் , கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் ,
“ஜனாதிபதியின் முயற்சியின் நிமித்தம் இந்த தேசிய பௌதீக திட்டமிடல் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாண நகரத் திட்டமிடல் தொடர்பான அனைத்து திட்டமிடல்களையும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அதற்கான அனுமதி பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல்கள் தொடர்பான தமிழ் மொழியாக்கம் தேவை என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, நகர திட்டமிடல்களின் போது புவியியல் கேந்திரங்களை மையப்படுத்தி, இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அனைத்து துறைகளையும் இணைப்பதற்கான தொடர்பு முறைமை ஒரு சவாலாக காணப்படுகின்றது. அதேபோல யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவது என்பது பாரிய சவாலாக காணப்படுகின்றது. வீதி போக்குவரத்து என்பது மிக நெடுந்தூரமாக காணப்படுவதன் காரணமாக முதலீட்டாளர்களின் வருகை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. ஆகவே நகரத் திட்டமிடலின் போது போக்குவரத்து தொடர்பினை ஏற்படுத்தும் இலகு முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் ஏனைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனுமதிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் காணப்படக்கூடிய சிக்கல் நிலைகளை தவிர்த்து எவ்வாறு இலகுவில் முதலீடுகளை மேற்கொள்வது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்துவது அவசியமாக காணப்படுகின்றது. நகர திட்டமிடல்களின் போது பெருநகரங்களை அபிவிருத்தி செய்யும் அதே சந்தர்ப்பத்தில் ஏனைய சிறுநகரங்களையும் அபிவிருத்தி செய்து அவற்றையும் பெரு நகரங்களுடன் இணைக்க வேண்டும். அத்துடன் கழிவு முகாமைத்துவம், பயணிகளுக்கான சிறந்த தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கருத்தில் கொண்டு நகரத் திட்டமிடல்களை வடிவமைத்தல் அவசியம். வடக்கையும் கிழக்கையும் இணைக்க கூடிய வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பு செய்வது தொடர்பிலும் இச் செயல்திட்டத்தில் கவனம் செலுத்துவது சிறப்பாக அமையும்.” என கருத்து தெரிவித்தார்.