பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது.
இந்நிலையில் இந்த ஓம் பர்வதமலை கடந்த வாரம் பனிக்கட்டிகள் முற்றிலும் மாயமாகி வெறும் பாறைகளாக காட்சியளித்தன. இதுபோல் ஓம் பர்வத மலை பனி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இது இப்பகுதி மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இது குறித்து இங்குள்ள குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா சான்வல் கூறுகையில், ‘‘பனி இல்லாமல் ஓம் வடிவிலான இந்த மலையை அடையாளம் காணவே முடியவில்லை’’ என்றார்.
இந்த நிலை தொடர்ந்தால், இப்பகுதியில் சுற்றுலா பாதிக்கப் படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இங்கு சில நாட்களுக்கு முன் பனிப்பொழிவு ஏற்பட்டதால், ஓம் பர்வத மலையில் மீண்டும் பனித் துகள்களை பார்க்க முடிந்தது. இது இப்பகுதி மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
‘‘இமயமலைப் பகுதியில் கடந்தசில ஆண்டுகளாக மழை மற்றும் பனிப்பொழிவு குறைவால், தற்போது ஓம் பர்வத மலையில் பனித்துகள்கள் முற்றிலும் மறைந்துவிட்டன’’ என கைலாஷ் – மானசரோவர் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரைகள் நடத்தும்தன் சிங் கூறுகிறார்.
அல்மோராவில் உள்ள ஜிபி பந்த் இமயமலை சுற்றுச்சூழல் தேசிய மையத்தின் இயக்குநர் சுனில் நாட்டியால் கூறுகையில், ‘‘இமயமலைப் பகுதியில் வாகனங்கள் அதிகரிப்பால் வெப்ப நிலை உயர்வு, புவி வெப்பம் அதிகரிப்பு, காட்டுத் தீ ஆகியவை காரணமாக பனி மறைகிறது’’ என்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇