மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமதி அசோகாம்பிகை யோகராஜா எழுதிய “கனவுகள் சுமக்கும் காலம்” நூல் வெளியீட்டு விழா 20.10.2024 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் அரங்கேற்றப்பட்டது.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி சரண்யா ஷண்முகப்பிரியன் மற்றும் திருமதி லாவண்யா மகிரதன் ஆகியோர் தமது வசீகரக் குரலால் இசைக்க, நூல் அறிமுகவுரையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் மு.கணேசராசா நிகழ்த்தியதுடன், நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் செ.அமிர்தலிங்கம் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிதிகள் உட்பட நிகழ்வில் கலந்து கொண்டோருக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது நூல் நயவுரையினை கவிஞர் ஜிஃப்ரி ஹாசன் நிகழ்த்தியதுடன், ஏற்புரையினை நூலாசிரியை திருமதி அசோகாம்பிகை யோகராஜாவும், நன்றியுரையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர் திருமதி கவிமகள் ஜெயவதியும் நிகழ்த்தினர்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர் இரா.பிரதீஸ்காந்த் தொகுத்து வழங்கியிருந்ததுடன், இந்நூல் அரங்கேற்றத்தில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இலக்கிய வாதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇