ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை….
சிலருக்கு காதில் திடீரென்று வலி ஏற்படும். வேறு சிலருக்கு கேட்கும் செவித்திறன் குறைந்தது போலும் காதில் ஏதேனும் அடைத்திருப்பது போலும் தோன்றும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளாமல், உடனடியாக அருகில் இருக்கும் இதற்கென பிரத்யேக சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும் , சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக எம்முடைய காது மற்றும் அது உட்பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கூறுகள் இருக்கும். இவை எம்முடைய உடலில் தோல் பகுதியில் வாழ்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஆரோக்கியத்திற்கு உதவினாலும் கட்டுப்பாட்டை மீறி இருந்தால் அவை பாதிப்பை உண்டாக்கக் கூடும்.
குறிப்பாக காதின் உட்பகுதியில் இத்தகைய நுண்ணுயிரிகள் இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால் அப்பகுதியில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக இவற்றின் தொற்று பாதிப்புகள் அதிகரித்து விடும். இதனால் காதில் வலி, அரிப்பு ,காது அடைப்பு , கேட்கும் திறன் குறைவு என பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும்.
காதில் இறந்த செல்களால் ஏற்படும் மெழுகு போன்றவற்றை மக்களாகவே சுய மருத்துவம் என்ற பெயரில் துணியால் அகற்றுவது காது கால்வாய் பகுதியில் நோய் தொற்றை அதிகப்படுத்தி விடும். ஏனெனில் இத்தகைய பகுதியில் உள்ள இயற்கையான பாதுகாப்பு மறைந்துவிடும்.
இந்த தருணத்தில் இயல்பான அளவை விட கூடுதலாக ஈரப்பதம் இருந்தால் சில நோயாளிகளுக்கு பூஞ்சை தொற்று பாதிப்பு அல்லது பாக்டீரியா தொற்று பாதிப்பு உண்டாகும். இதனை மருத்துவ மொழியில் ஓட்டோமைகோசிஸ் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இதன் போது வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு , உங்கள் காது கால்வாயை முழுமையாக சுத்திகரித்து, அங்குள்ள இறந்த தோல் மற்றும் பூஞ்சை கூறுகளை முழுமையாக அகற்றுவார்கள். நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் உங்கள் காது பகுதியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படாத வண்ணம் நிவாரணம் வழங்குவார்கள்.
மேலும் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாத வண்ணம் தற்காத்துக் கொள்ளும் வகையில் வைத்தியர்கள் சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பரிந்துரைக்கக்கூடும். அதனை நீங்கள் முழுவதுமாக பாவிக்கும் போது இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கலாம்.
வைத்தியர் கிருஷ்ணகுமார்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇