“உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்” எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளமும் இணைந்து நடாத்திய நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திலிருந்து உனது நலனுக்காக தீர்மானம் எடுப்பதில் உனக்காக நான் துணை நிற்பேன் என்னும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர மண்டபம் வரையில் இந்த ஊர்வலம் வருகைதந்ததுடன் அங்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கமும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.இளங்குமுதன், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள சிரேஸ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி சி.கோணேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாற்றுத்திறனாளிகளாகயிருந்து சாதனை படைத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇