நெல் அறுவடைக்கு முன்னர் விலை நிர்ணயத்துக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய விவசாய அமைப்புக்கள் இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24.12.2024 அன்று இடம்பெற்றது.
நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் வடக்கிலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆளுந ர், அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், வடக்கில் விளையும் நெல்லில் பெரும் பகுதியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அதிகரித்த கடன் வழங்கலுக்கு வங்கிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் 3 லட்சம் மெட்ரிக் தொன் விளையும் என எதிர்பார்க்கப்படுவதால், அவற்றில் ஆகக் குறைந்தது 30 ஆயிரம் மெட்ரிக் தொன்னையாவது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் வடக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் முன்வைத்தார். தற்போதைய அதிகரித்த போக்குவரத்துச் செலவுகளைக் கருத்திலெடுத்து உள்ளூரில் உற்பத்தியாகும் நெல்லை உள்ளூரில் களஞ்சியப்படுத்துவதன் ஊடாக அரிசி விலையை குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அதிகரித்த நெல் கொள்வனவுக்குரிய நிதி மூலங்களும் அடையாளம் காணப்பட வேண்டும் எனக் கோரியதுடன், விவசாயிகள் நெல்லுக்கான கொடுப்பனவை காலம் தாழ்த்தி பெற்றுக்கொள்வதற்கான யோசனையையும் முன்வைத்தார். மேலும் விவசாயிகளிடமிருந்து ஈர நெல்லைக் கொள்வனவு செய்து அதனை உலர்த்திய பின்பு விலை நிர்ணயம் செய்வதற்கான யோசனையையும் அவர் முன்வைத்தார்.
வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய அமைப்புக்களைப் பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள், விவசாயிகள் நெல் அறுவடை முடிந்தவுடனேயே கொடுப்பனவை எதிர்பார்ப்பார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள். அத்துடன் இடைத்தரகர்கள் மூலமே பிரச்சினைகள் உருவாகுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையோ, கூட்டுறவு சங்கங்களோ ஈர நெல்லை கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் எனவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
நெல் கொள்வனவுக்கான அறிவுறுத்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் வசம் உள்ள நெல் உலர விடும் தளங்களை தயார்படுத்த பணித்துள்ளதாகவும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் குறிப்பிட்டார். அத்துடன் நெல்கொள்வனவுக்கு சங்கங்களுக்கு முற்கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை வடக்கில் விளையும் நெல்லில் அதிகளவானவற்றை இங்குள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை என்பன கொள்வனவு செய்வதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ளதைப்போன்று அரிசிக்கான விலை தளம்பல் எதிர்காலத்தில் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபன், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் ஆ.சிறி, வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.