சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளீரை வலுப்படுத்தும் நோக்கில் “நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்” எனும் தொனிப்பொருளில்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் சுற்றுப் போட்டி 06.03.2025 அன்று மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் மூன்று தினங்களாக இடம் பெறவுள்ள நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளீதரன் கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.சனஞ்ஜெயன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மகளீர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் எட்டாம் திகதி வரை மாவட்டத்தில் பல்வேறுபட்ட மகளீர் தின நிகழ்வுகள் இடம் பெற்று வரும் நிலையில் குறித்த வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி மூன்று தினங்களுக்கு இடம் பெறவுள்ளதுடன், இப்போட்டி நிகழ்வுகளில் 16 பாடசாலை அணிகளும், மாவட்ட செயலக அணியும், 9 பிரதேச செயலக அணிகளும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










