நியூசிலாந்தின் நினைவுச்சின்னம் கடற்கன்னி ‘பனியா’!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலகில் பல்வேறு நாடுகளில், பற்பல நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. அந்த நினைவுச்சின்னங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை நமக்கு கூறுகின்றன. அப்படி, நியூசிலாந்தில் காணப்படும் ஒரு பிரபல நினைவுச் சின்னம் தான் கடற்கன்னி பனியா.

இது, மாவோரி புராணங்களில் காணப்படும் ஒரு கடற்கன்னி பற்றிய கற்பனை கதையாகும். பனியா குறித்து அந்நாட்டில் கூறப்படும் பழங்கதை இதுதான்.

நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரை கடலில் வாழ்ந்த ஒரு அழகான கன்னிப் பெண் தான் பனியா. இவள் ஒரு கடற்கன்னி. அதாவது, பகல் நேரத்தில் இவள் ஒரு மீனாகவும், சூரியன் மறைந்தவுடன் பெண்ணாகவும் மாறுவாளாம்.

பகல் நேரத்தில் அங்கிருக்கும் கடலில் நீந்தும் பனியா, இரவுப் பொழுதில், அங்குள்ள ஒரு ஓடையில் ஓய்வெடுக்கச் செல்வாள். அப்படி அவள் ஓய்வெடுக்கச் செல்லும் போது, மாவோரி தலைவரின் மிக அழகான மகனான கரிடோகி, ஒவ்வொரு மாலை பொழுதும், தனது தாகத்தைத் தணித்துக் கொள்ள பனியா ஓய்வெடுக்கும் இடத்துக்கு வருகிறான்.

அவனை பனியா தொடர்ந்து கண்காணித்து வருகின்றாள். ஆனால், பல வாரங்களாக பனியா தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பதை கரிடோகி கவனிக்கவில்லை. இப்படியிருக்கையில் ஒரு நாள் இரவு, அவள் மந்திரம் ஒன்றைச் சொல்கிறாள். அது கரிடோகியை காற்றில் பறக்கச் செய்கிறது. பின்னர் தனது மறைவிடத்திலிருந்து பனியா வெளிப்படுகிறாள்.

அப்போது, பனியாவைக் கண்ட கரிடோகி, அவள் அழகில் மயங்கி, காதலில் விழுகிறான். இருவரும் சில நாட்கள் காதலிக்கின்றார்கள். ஒருநாள், இருவரும் இரகசியமாகத் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

இரவு நேரத்தில் பனியாவை கரிடோகி, தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இருள் சூழ்ந்த நேரம் என்பதால், அவர்களை யாரும் பார்ப்பதில்லை. விடிந்ததும், பனியா அங்கிருந்து வெளியேறிவிடுகின்றாள். இப்படியே நாட்கள் நகர்கின்றன.

ஆனால் கரிடோகியால் சிறிது நேரம் கூட அவளை பிரிய முடியவில்லை. அவன் அவளைத் தடுக்க முயல்கிறான். இருப்பினும், பனியா, பகல் பொழுதில் தான் கடலுக்குள் செல்லாவிட்டால், தன்னால் உயிர்வாழ முடியாது என்று தன் நிலை பற்றி அவனுக்கு விளக்குகிறாள். தான் தினமும் மாலை வேளையில், அவனிடமே திரும்பி வருவதாகவும் உறுதியளித்து கடலுக்குச் செல்கிறாள்.

இருப்பினும் கரிடோகியால் அந்த சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன், தனது அழகான மனைவியைப் பற்றி தனது நண்பர்களிடம் பெருமையாகக் கூறுகிறான்.

ஆனால், அவர்கள் யாரும் அவளைப் பார்த்ததில்லை என்பதால் யாரும் அவன் சொல்வதை நம்பவில்லை. அதனால் விரக்தியடைந்த கரிடோகி கிராமத்தில் உள்ள ஊர்பெரியவர் ஒருவரைக் கலந்தாலோசிக்கிறான். அவர் கடல் கன்னிகள் பற்றி அறிந்திருந்ததால், கரிடோகியை நம்புகின்றார்.

பின்னர், அவள் ஒரு கடற்கன்னி என்பதால், சமைத்த உணவை அவள் விழுங்கினால், மீண்டும் பனியா கடலுக்குத் திரும்பச் செல்லமாட்டாள் என்று கரிடோகியிடம் ஆலோசனை கூறுகிறார்.

அன்று இரவு பனியா உறங்கும் போது, கரிடோகி சமைத்த உணவை எடுத்து பனியாவின் வாயில் வைத்து விடுகிறான். அப்போது, ஓர் ஆந்தை உரத்த எச்சரிக்கை விடுக்கிறது. தூக்கத்திலிருந்து எழுந்த பனியா கரிடோகி தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டான் என பயந்து, அங்கிருந்து தப்பி ஓடி கடலுக்குள் சென்று மறைந்து விடுகிறாள்.

கரிடோகியோ, கடலுக்குள் நீந்தி சென்று அவளைத் தேடுகிறான். ஆனால் அவனால், அவளை மீண்டும் பார்க்கவே முடியவில்லை.

இது தான் அந்த பழங்கதை.

இக்கதையை நினைவு கூரும் வகையில், நியூசிலாந்தின் நேப்பியர் நகரத்தில், கடற்கன்னி பனியாவுக்கு சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது, நியூசிலாந்தின் பிரபல நினைவுச் சின்னமாகத் திகழ்கின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects