காரைநகரில் இருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 இற்கு யாழ்பாணத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் 785/1 பேருந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது.
கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர்- மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது.
இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பஸ் போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பஸ் போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேருந்து சேவையை முன்னெடுக்க சாதகமான சமிஞ்சை கிடைத்ததால் மீண்டும் இன்று முதல் இச்சேவை ஆரம்பிக்கபட்டுள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயனாளிகள் பயன் பெற முடியும்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்திய சாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப்பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇