ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 04.05.2025 அன்று அலரி மாளிகையில் சந்தித்துக் கந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவு குறித்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்கை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை பற்றிய தகவல்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) மற்றும் இரு நாடுகளின் அரசாங்கங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










