தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை நிலையம் ஒன்றை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடலொன்று 20.05.2025 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக குறித்த சிகிச்சை நிலையத்தை நிறுவுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்தினை நிறுவுவதற்கு தேவைப்பாடாகவுள்ள காணியினை இனங்கண்டு கொள்வது தொடர்பாகவும், மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் இதற்காக பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது போன்ற விடயங்கள் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு நிலை கட்டளை அதிகாரி கே.கே.எஸ்.கொத்தளாவல தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவிற்கான பணிப்பாளர் சாந்த கமகே, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வெளிக்கள பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிலாணி அழுத்கே, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு நிலை கட்டளையதிகாரி சாலிய ஹேமசந்திர, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் வீ.எம்.றஷாட், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பீ.தினேஸ், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










