ஜனாதிபதியினால் 29ஆம் திகதி தொடக்கம் ஜுன் 05ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இருதயபுரம் வின்சன்ட் டி பவுல் பாலர் பாடசாலையும் இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு மற்றும் பாலர் பாடசாலையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வும் 30.05.2025 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகளார், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வின்சன்ட் டி பவுல் பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
பொலித்தீன் பாவனையற்ற அழகிய எதிர்காலத்தினை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் இந்த சுற்றாடல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல், மீள்உருவாக்கம், நகர்ப்புற சூழலை சுத்தப்படுத்தல், சிரமதான நிகழ்வுகள், மர நடுகை என பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.
இதன்போது மாநகரசபையிடம் கையளிப்பதற்காக சிறுவர்களினால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிப்பொருட்கள் சிறுவர்களினால் உதவி பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பிளாஸ்டிகினால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் இதன்போது விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் சிறுவர்கள் மத்தியில் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் ஆபத்துகளையும் இயற்கையினை நேசிக்கும் தலைமுறையினை உருவாக்கும் நோக்கிலும் இயற்கை பொருட்களைக் கொண்ட சிறுவர் சந்தையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இச் சிறுவர் சந்தையில் எமது சூழலில் கிடைக்கும் மரக்கறிகள் மற்றும் பழவகைகள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










