மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா? சேர்க்கப்படவில்லையா? என்பதை அறிந்து கொள்ள ஒன்லைன் போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த போட்டல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் வாகனப் புகை பரிசோதனை விதிமுறைகளை அமுல்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சேவையாகும்.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ Vet.lk இணையத்தளம் மூலம் தங்கள் வாகன நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்த போட்டலில் வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து தங்கள் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் உள்ளதா என அறிய முடியும்.
வாகன உரிமையை மாற்றும் போது ஏற்படும் சிக்கல்களைத் தடுத்தல், தீர்க்கப்படாத போக்குவரத்து விதி மீறல்களைத் தீர்த்தல் மற்றும் வாகனங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள விசாரணைகளை நிர்வகித்தல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
அதிகளவான புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் காண, புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறியும் திட்டம் மற்றும் வீதியோர வாகன சோதனைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் தீவிரமாக நடத்துகிறது.
அத்தகைய வாகனங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதங்கள் மூலம், வேராஹெரா மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்காக தங்கள் வாகனங்களை கொண்டுவருமாறு அறிவிக்கப்படும்.
இந்த அறிவிப்புக்களை செவிமெடுக்க தவறினால், வாகனம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன், வாகனம் ஒன்றின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் சான்றிதழ் மற்றும் வருமான உரிமம் சோதனை மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்கு உட்படும் வரை புதுப்பிக்கப்படாது.
மேலும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாகனம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, வாகனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ சேவைகள் அல்லது பரிவர்த்தனைகளையும் நிறுத்துகிறது.
அனைத்து வாகன உரிமையாளர்களும், குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குபவர்கள், சட்ட அல்லது நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்க இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாகனத்தின் நிலையை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் www.vet.lk என்ற உத்தியோகபூர்வ இணைய சேவையை அணுகி உங்கள் வாகனம் கருப்புப் பட்டியலில் உள்ளதா? இல்லையா? என்பதை சரிபார்க்கலாம்….




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










