இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் கிக்கும் இடையில் 10.07.2025 அன்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் வைத்து நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது, நாட்டில் மருந்துகளின் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது அமெரிக்க தூதுவர் அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கு தனது இணக்கத்தை தெரிவித்தார்.
நாட்டின் இலவச சுகாதாரம் மற்றும் ஊடகத் துறையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்காவின் நன்கொடையாக 1973 ஆம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அமெரிக்க தூதுவருக்கு ஒரு சிறப்பு விளக்கமும் வழங்கப்பட்டது.
இதன்போது, நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளில் எதிர்கால முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி, தொழில்நுட்பம், அறிவு மற்றும் பௌதீக ரீதியாக வழங்கக்கூடிய அனைத்து சாத்தியமான உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமெரிக்க தூதரகத்தையும் சுகாதார அமைச்சையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










