ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்…
உலகளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மைக்ரெய்ன் எனப்படும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மூன்று வகையினதான நரம்பியல் மண்டலம் தொடர்பான குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு தொடக்க நிலையில் கண்டறிந்து முழுமையான மற்றும் முறையான சிகிச்சையை பெற்றவர்களுக்கு நிவாரணம் கிடைத்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக எம்மில் பலரும் ஒற்றை தலைவலி பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். இது பற்றி வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்திருக்கிறார்கள்
ஆண்களை விட பெண்களே அதிகளவில் ஒற்றை தலைவலி பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். சில தருணங்களில் அவர்களுடைய நாளாந்த கடமையை கூட செய்ய விடாத அளவிற்கு கடுமையான பாதிப்பை இவை ஏற்படுகிறது. பொதுவாக ஒற்றைத் தலைவலி பாதிப்பை Prodromal stage – Aura Stage – Headache Stage – Postdromal Stage என நான்காக வைத்தியர்கள் வகைப்படுத்துவார்கள்.
இதில் முதல் நிலை ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக இத்தகைய பாதிப்பு தொடர்பாக சில அறிகுறிகள் உண்டாகும். குறிப்பாக குறிப்பிட்ட சில உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது சிறிய அளவிலான ஒலிகளை உன்னிப்பாக கவனிப்பது சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது ஆகிய அறிகுறிகளை குறிப்பிடலாம்.
இரண்டாவது நிலையில் ஒரு மணித்தியாலம் முதல் நான்கு மணித்தியாலம் வரை கடுமையானதாகவோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் வகையிலோ தலைவலி ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் உங்களுடைய கண்களில் பிரத்யேகமாக ஒளி பாய்ச்சப்படுவதாக உணர்வீர்கள். சில பிரத்யேகமான நுட்பமான ஒலியை கேட்பீர்கள். உடலில் மரத்து போதல் ஏற்படும்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது நிலையை எட்டினால் நான்கு மணி தியாலத்திலிருந்து தொடர்ந்து 72 மணி நேரம் வரை தலைவலி ஏற்படும். இத்தகைய தருணங்களில் தலைவலி ஏதேனும் ஒரு பக்கத்தில் தான் ஏற்படும். சிலருக்கு கண்ணைச் சுற்றியும், சிலருக்கு காதுக்கு அருகேயும், பின் மண்டை மற்றும் முன் நெற்றி போன்ற இடங்களில் கடுமையான வலி ஏற்படும். சிலருக்கு இந்த அறிகுறியுடன் குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படலாம். இத்தகைய தருணத்தில் அவர்களால் எந்த பணியையும் முழுமையான கவனத்துடன் செய்திட இயலாத நிலை உருவாகும். வேறு சிலருக்கு பிரகாசமான ஒளியை கூட பார்க்க இயலாது. உதாரணத்திற்கு மடி கணணியின் திரையில் ஒளிரும் ஒளியை கூட அவர்களால் விருப்பத்துடன் பார்க்க இயலாது. மேலும் வேறு சிலர் ஒலி தொடர்பான பாதிப்பும் ஏற்படும். யாரேனும் கூடுதலாக சப்த எழுப்பி பேசினாலும் இவர்கள் அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.
நான்காவது நிலையின் போது தலைவலியின் பாதிப்பு அதிகமாகி அதீத சோர்வுக்கு ஆளாகுவார்கள். இதற்கு உடனடியாக நரம்பியல் வைத்திய நிபுணர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பிரத்யேக சிகிச்சைகளையும், ஒருங்கிணைந்த சிகிச்சைகளையும் மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
வைத்தியர் இளந்திரையன்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










