2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இது இலங்கையின் 78 ஆவது பாதீடாக கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவினம் 3 ஆயிரத்து 860 பில்லியன் ரூபாவாகும்.
2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மதிப்பிடப்பட்ட செலவினம் 3 ஆயிரத்து 657 பில்லியன் ரூபாவாகும்.
இதன்பிரகாரம் , கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த ஆண்டுக்கான உத்தேச செலவு 203 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அடுத்த வருடத்துக்கான பாதீட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு உத்தேச செலவுகளுக்காக அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அமைச்சுக்கு 885 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இது கல்விக்காக ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு இல்லையென கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் கல்விக்காக மேலதிகமாக நிதி ஒதுக்கப்படவுள்ளது.
அந்த வகையில் , பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக 22ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்கள் குழுநிலை விவாதம் நடைபெறும்.
இதனையடுத்து 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇