தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போஷாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்ட பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சார்க் அபிவிருத்தி நிதி மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் கொழும்பில் 05.08.2025 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 3.97 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஊடாக பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமியக் குடும்பங்கள் பயனடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் சுமார் 11,000 கிராமிய மீன் வளர்ப்பு குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளன.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், கித்சிறி தர்மப்பிரிய
“நமது நாடுகளில் நன்னீர் மீன்வளர்ப்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான தரமான மீன் குஞ்சுகளின் தட்டுப்பாடு மற்றும் மீன் தீவனத்திற்கான அதிக செலவு ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதே இதன் பிரதான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலான மீன் தீவனத்தை உற்பத்தி செய்யவும், இலங்கையின் எட்டு மாவட்டங்களில் மீன் குஞ்சுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக்கு இன்னும் தேவைப்படும் சுமார் 300,000 மெட்ரிக் தொன் மீன் அறுவடையை கடலில் இருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு நன்னீர் மீன்வளர்ப்பை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் 800-900 குடும்பங்கள் நேரடியாக வறுமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். அத்தோடு 30,000க்கும் அதிகமானோருக்கு மறைமுகப் நன்மைகளும் கிடைக்கும் ” என்றார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










