இலங்கையில் சிறுத்தைகளை பாதுகாக்க கால்நடை காப்புறுதித் திட்டம் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (WNPS), மற்றும் LOLC காப்புறுதி நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய கால்நடை காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், அழிந்து வரும் இலங்கைச் சிறுத்தைகளைப் (Panthera pardus kotiya) பாதுகாக்க ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், சிறுத்தைகளால் தங்கள் கால்நடைகளை இழக்கும் விவசாயிகளுக்கு விரைவான நிதி இழப்பீடு வழங்கப்படும். இதன் மூலம், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், பதில் நடவடிக்கையாக சிறுத்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் இந்தத் திட்டம் உதவுகிறது.

மனித – சிறுத்தை மோதல்களுக்கு என்ன காரணம்?

இலங்கையின் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கிய வேட்டையாடும் விலங்கான சிறுத்தைகள், விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கின்றன. அத்துடன் சிறுத்தைகளின் வாழ்விடங்களான வில்பத்து, யால, குமண மற்றும் ஹோட்டன் பிளேன்ஸ் போன்ற தேசிய பூங்காக்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

இருப்பினும், வாழ்விடங்கள் சுருங்குதல், காடுகள் அழிக்ப்படுதல் மற்றும் வேட்டையாடுதல் காரணமாக, சிறுத்தைகள் சில சமயங்களில் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து, கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இது கிராமப்புற விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன், பதிலடி நடவடிக்கையாக சிறுத்தைகள் கொல்லப்படுவதற்கும் வழிவகுக்கிறது.

காப்புறுதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

விரைவான இழப்பீடு: கால்நடை இழப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் பிராந்திய அதிகாரியிடம் தகவலைத் தெரிவிக்க முடியும். இதன் பின்னர், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், கால்நடை மற்றும் கிராம அலுவலர்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்கும். சம்பவம் உறுதி செய்யப்பட்டவுடன், இழப்பீடு தாமதமின்றி நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இது பொதுவாக 72 மணி நேரத்திற்குள் நிறைவடையும்.

நிதி பங்களிப்பு: இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் தொகையை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) தனது பல்லுயிர் நிதி முன்முயற்சி (BIOFIN) மூலம் வழங்குகிறது. LOLC ஹோல்டிங்ஸ் இந்த திட்டத்தின் காப்பீட்டு வழங்குநராக செயல்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இந்தத் திட்டம் உடனடி நிவாரணத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வேட்டையாடலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க இரவு நேர காவல் அடைப்புகள் அமைப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது. மேலும், ‘கால்நடை வங்கி’ என்ற புதுமையான முறையும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் பண இழப்பீட்டிற்கு பதிலாக மாற்று விலங்குகளையும் வழங்க முடியும்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மராசிங்க இந்தத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

இது சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் ஒரு நீண்டகால சவாலுக்கு சரியான நேரத்தில் கிடைத்த நடைமுறைத் தீர்வு.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாகவும் நியாயமாகவும் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் மூலம் சிறுத்தைகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயத்தை குறைத்து, சமூகங்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நம்பிக்கையை நாம் கட்டியெழுப்புகின்றோம்.

கிராமப்புற வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் இலங்கைக்கே உரிய உச்ச வேட்டையாடும் உயிரினமான சிறுத்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கையான நடவடிக்கையாகவும் இதனை நாம் அவதானிக்கின்றோம் என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோட்டா பேசுகையில்,

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பங்களிப்பானது நிதி உதவிக்கு அப்பாற்பட்டது. இந்த காப்புறுதி முயற்சியின் அமைப்பு, விநியோகம் மற்றும் அணுகலை நாங்கள் வலுப்படுத்துகின்றோம்.

அதற்காக விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர்களை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்துவதோடு குறித்த திட்டம் தொடர்பில் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களை, ஆரம்பநிலை தகவல் தொடர்பு பிரச்சாரங்கள் வாயிலாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளுகின்றோம்.

உயிர் பல்வகைமைக்கான நிதி வழங்கல் உள்ளிட்ட பரந்தளவில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்ளும் இத்தகைய முன்முயற்சிகளின் கடந்தகால பணிகளை மீள் எழுச்சிபெறச் செய்வதன் மூலம் காப்பீட்டுத் திட்டத்தை தேசிய கொள்கை கட்டமைப்புகளுக்குள் கொண்டு செல்வதற்கும் நிதி வழங்கல் உள்ளிட்ட புதுமையான வழிமுறைகளை பரிசோதித்துப் பார்ப்பதற்கும் நாம் துணைபுரிகின்றோம்.

குறிப்பாக வாழிடங்களில் உயிர்களைப் பாதுகாப்பது மற்றும் நிலையான சமூகங்களை உருவாக்குவதுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு நாம் துணை புரிகின்றோம் என்று கூறினார்.

இத் திட்டம் குறித்து LOLC காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் கித்சிறி குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுத்தை இனத்தை வேட்டையாடுதலுக்கான இலங்கையின் முதல் கால்நடை இழப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றுடன் கூட்டிணைவதில் நாங்கள் பொருமை கொள்ளுகின்றோம்.

இந்த முன்முயற்சி அவசர பாதுகாப்புத் தேவையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல் கிராமப்புற வாழ்வாதாரங்களை ஆதரிக்கும் அதேவேளையில், பல்லுயிரியைப் பாதுகாப்பதற்கான எமது நீண்டகால உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது.

நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சமூகங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் செழித்து வளரக்கூடிய நிலைபேறான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றார்.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் கிரஹாம் மார்ஷல் கூறுகையில்,

நீடித்த பாதுகாப்பு என்பது மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் பயனளிக்கும் நீண்டகால தீர்வுகளை சார்ந்துள்ளது.

இந்த இழப்பீட்டுத் திட்டம் அத்தகைய வடிவிலான ஒரு முயற்சியாகும். நடைமுறை நீதியானதும், அறிவியல் அடிப்படையிலானதும் ஆகும். காலப்போக்கில் சமூகங்களுடன் நாம் உருவாக்கும் நம்பிக்கையில் அது வேரூன்றியுள்ளது என்றார்.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் செயற்றிட்டத் தலைவர் ஸ்பென்சர் மனுவேல்பிள்ளை தெரிவிக்கையில்,

இந்த முயற்சியானது ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கான உண்மையான தீர்வுகளாக மாற்றுவதற்கான வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றது. LOLC காப்புறுதி நிறுவனம் மற்றும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் ஆகியன இணைந்து பல பிராந்திங்களிலும் முன்னெடுத்த சிறுத்தை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அத்தகைய திட்டத்தின் தேவை வெளிப்பட்டது. இது கால்நடைகளை வேட்டையாடுதலே மோதலின் முக்கிய காரணியாக இனங்காணப்பட்டது.

இந்தப் பிரச்சினையை முடிவில்லாமல் விவாதிப்பதற்கு பதிலாக சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் உள்ள நீண்டகால சவாலை நிவர்த்தி செய்யும் ஒரு முன்னோடியான நடைமுறைசார் பொறிமுறையை உருவாக்க நாம் செயற்பட வேண்டும். என்று களமிறங்கினோம். அதே நேரத்தில் அவற்றின் பாதுகாப்புக்காக தமது நிலங்களைப் பகிர்ந்து கொள்ளும் நலன்விரும்பிகளையும் நாம் ஆதரிக்கின்றோம் என்றார்.

இந்த திட்டம், பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆகியவற்றுக்கும் பயனளிக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை எடுத்துக் காட்டுகின்றது. இது கிராமப்புற மக்களின் பொருளாதார யதார்த்தத்தை அங்கீகரிப்பதுடன், நாட்டின் தனித்துவமான இயற்கை பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects