மட்டக்களப்பு – பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் இரண்டாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த பீடத்தின் பீடாதிபதியாக 05-09-2022 ஆம் திகதியிலிருந்து கடமையாற்றிய இவரின் பதவிக்காலம் 04-09-2025 அன்று முடிவடைந்த நிலையில் இரண்டாவது தடவையாக மீண்டும் 05-09-2025 அன்று தெரிவு செய்யப்பட்டதுடன் 04-09-2028 வரை குறித்த பதவியில் சேவையாற்றவுள்ளார்.
மட்டக்களப்பில் மண்டூர் மகா வித்தியாலயம், புனித மிக்கேல் கல்லூரி மற்றும் கொழும்பு விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி பட்டத்தினையும், தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல்வேறு பட்டப்பின்படிப்புகளையும் பூர்த்தி செய்து, ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டதுடன், சட்டத்தரணியாகவும் செயற்படுகின்றார்.
சைவப்புலவர், சைவப் பண்டிதர் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ள இவர் பல்வேறு சமூகம் சார்ந்த வேலைத்திட்டங்களிலும் பங்களிப்பு செய்து வருகின்றார்.
பேராசிரியர் சதானந்தன் பீடாதிபதியாகக் கடமையாற்றிய 2022 முதல் 2025 காலப்பகுதிக்குள் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் பல்வேறு பௌதீக வளங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










