கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04) ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர், அவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள்.
தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 65,531 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2302 பரீட்சை நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிடுகின்றார்.
“பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். பரீட்சை நிலையங்களுக்கு முன்கூட்டியே செல்லுங்கள். இந்த முறை புதிய பாடம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதாவது கொரிய மொழி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பாடத்தை சேர்த்ததால் அட்டவணையில் சில மாற்றம் ஏற்பட்டது. முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம். பரீட்சைக்கான அனுமதி பத்திரத்திலேயே அட்டணை இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு வர முடியாத மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்களை நிறுவுவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளம் காரணமாக போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇