2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இலங்கை மின்சார சபை ஈட்டிய இலாபம் 85 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய நிதி அறிக்கைகளின் பிரகாரம் ,
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் நிதிச் செயல்பாடு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய இலாபம் 3.58 பில்லியன் ரூபாயாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இலாபம் 24.58 பில்லியன் ரூபாயாக காணப்பட்டது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான இலாபத்துடன் ஒப்பிடுகையில், இது 85 வீத சரிவாகும்.
மேலும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஈட்டப்பட்ட 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்திலிருந்து 32.5 வீத வீழ்ச்சியையும் இது பிரதிபலிக்கிறது.
ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலப்பகுதிக்கு ஒட்டுமொத்தமாக, இலங்கை மின்சார சபை 9.58 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான 143.79 பில்லியன் ரூபாய் என்ற கணிசமான இலாபத்துடன் ஒப்பிடுகையில், இது 107 வீத பின்னடைவாகும்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 18.47 பில்லியன் ரூபாய் என்ற பெரும் இழப்பே இந்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த இழப்பு நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை பெரிதும் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










