இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பல அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகளின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, அக் குழு 17.11.2025 அன்று அதன் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.
இதன்போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு விடயங்களை விளக்குகையில், தற்போது எதிர்வு கூறப்பட்டுள்ளதன் படி இலங்கையில் 16.5 மில்லியன் காணித் துண்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2.5 மில்லியன் காணித் துண்டுகள் மட்டுமே இதுவரை அளவீடு செய்யப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதற்கமைய, எஞ்சிய காணித் துண்டுகளை கூடிய விரைவில் அளவீடு செய்து வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவிற்கு அழைத்து, எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் சட்டரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் காணிகளை குத்தகைக்கு வழங்கியதால் நிலவும் வரி/குத்தகை நிலுவைத் தொகைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான குத்தகை ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நிலங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் குத்தகைவரி நிலுவைகளை அறவிடுவதற்கான செயன்முறையைத் தயாரித்து, நிலுவைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல மற்றும் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










