‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கனடா 2 மில்லியன் கனேடிய டொலர்களுக்கும் அதிகளவிலான அவசர கால மனிதாபிமான நிதியுதவியை அறிவித்துள்ளது.
கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்கச் செயலாளர் ரன்தீப் சராய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இந்த நிதியில், 1.4 மில்லியன் டொலர் உலக உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ‘வேர்ல்ட் விஷன் கனடா’ அமைப்புக்கு 350,000 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிக கூடாரங்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.
அதேநேரம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்காக இந்த நிதியில் 215,000 டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் மட்டத்திலான அவசர நிவாரணங்களுக்காக கனடா நிதியத்தின் ஊடாக சுமார் 70,000 டொலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகள், உட்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் பக்கபலமாக இருக்கும் என கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்கச் செயலாளர் ரன்தீப் சராய் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










