“இயலாமை என்று எதுவும் இல்லை” எனும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட தன்னார்வத் தொண்டர்களான இளைஞர் யுவதிகளால் மூவின இளையோர் மற்றும் மாணவர்களின் ஆளுமை ஆற்றல்களை மேம்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த மகிழ்வூட்டல் செயற்பாடு சமூக சேவைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு கும்புறுமூலை தொழில் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தொழில் பயிற்சி நிறுவனத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வை. ஜெகதாஸ், வி. வனிதா விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் சிரேஷ்ட சமூக நலத் தயாரிப்பு அலுவலர் எஸ். சுகிர்தவிழி உட்பட தொழில் பயிற்சி நிறுவகத்தில் தொழில் பயிற்சிகளை மேற்கொள்ளும் மூவின மாணவர்கள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட தன்னார்வத் தொண்டர்களள் எனப் பலரும் பங்குபற்றினர்.
நிகழ்வை ஆரம்பித்து வைத்த தொழில் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பதிகாரி காந்தி சுகந்தினி கருத்துத் தெரிவிகையில் இளையோர்கள் மத்தியில் இனம் மொழி மத பேதங்களையும் இயலாமை என்ற மனப்பாங்கையும் கடந்து எல்லோராலும் முடியும் என்பதை வலியுறுத்துவதே இத்தகைய செயற்பாடுகளின் நோக்கமாகும் என தெரிவித்தார்.
நிகழ்வில் இன ஐக்கியத்தையும்; சமாதான சகவாழ்வையும் பிரதிபலிக்கும் வகையில் இளைஞர் யுவதிகளாலும் தொழிற் பயிற்சி நிலைய மூவின மாணவர்களாலும் சித்திரங்கள் வரையப்பட்டன.
அத்துடன் இயற்கையோடு இணைந்து வாழுதல் எனும் செயற்திட்டத்தின் கீழ் பயன்தரும் மரக்கன்றுகளும் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடப்பட்டன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇