நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைக் காலங்களில் மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மின்சாரப் பயன்பாட்டில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் தரமற்ற மின்சார அலங்கார விளக்குகள் மற்றும் மின் உபகரணங்களால் கணிசமான எண்ணிக்கையிலான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படுவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் வீடுகளிலேயே, பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் இத்தகைய விபத்துக்கள் நேரிடுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ‘SLS’ தரச் சான்றிதழ் பெற்ற மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, 13A Type-G ரக சதுர ஊசி (Square Pin) செருகிகளை கொண்ட அலங்கார விளக்குகளையே கொள்வனவு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றில் வெட்டுப்பட்ட கம்பிகள், தளர்வான இணைப்புகள் அல்லது சேதமடைந்த மின்காப்பு உறைகள் (Insulation) உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். நீடிப்பு மின்வடம் (Extension cords) அளவுக்கு அதிகமான மின் சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன், மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகம் என்பதால், வெளிப்புற அலங்காரங்களுக்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மழைத்தூறலைத் தாங்கக்கூடிய விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
செருகிகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பெட்டிகள் ஈரம் படாதவாறு வீட்டிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அலங்கார விளக்குகளை திரைச்சீலைகள், காகித அலங்காரங்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் வைக்க வேண்டாம் என்றும், உற்பத்தியாளரின் அறிவுறுத்தலுக்கு மாறாக பல விளக்குத் தொகுதிகளை ஒன்றாக இணைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் இணைக்கப்பட்டிருக்கும் போது மின்விளக்குகளை மாற்றுவதோ அல்லது பழுதடைந்த விளக்குத் தொடர்களைத் தாமாகவே பழுதுபார்க்க முயல்வதோ ஆபத்தாக முடியும்.
எனவே, பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாட இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மின்சார சபையினருக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









