புனரமைப்புப் பணிகளுக்காக இன்று (19.01.2026) முதல் வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (19.01.2026) முதல் மஹவ – அநுராதபுரம் இடையிலான புகையிரதப் பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
மஹவ – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை இம் மாதம் 26 ஆம் திகதி முதல் முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதவாச்சி – தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று (19.01.2026) ஆரம்பிக்கப்படும் எனவும்புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரதப் பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு – தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ‘புலதிசி கடுகதி புகையிரதம் ’ மற்றும் ‘உதயதேவி’ புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான ‘இரவு தபால் புகையிரத ’ சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
இன்று (19.01.2026) முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை – காங்கேசன்துறை வரையும் ‘யாழ் ராணி’ புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










