இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் பராமரிப்பாளருக்கும் பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் கடந்த 16ம் திகதி நடைபெற்ற “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” (Global Caregiver Forum 2026) இன் “எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking forward and next steps) எனும் அமர்வில் உரையாற்றும் போதே மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எமது நாடு காட்டிய மனிதாபிமான அக்கறை மற்றும் அரவணைப்பு குறித்து அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உலகிற்கு எடுத்துரைத்தார்.
பராமரிப்பு என்பது ஒரு தனிப்பட்ட சுமை அல்ல, அது ஒரு அரசு மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தினார்.
எமது அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ், “பாதுகாப்பான சிறுவர் உலகம் – ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி” எனும் சிறுவர்களுக்கான தூரநோக்கிற்கு அமைய, ஆரம்பகால சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் விளக்கமளித்தார்.
முன்பிள்ளைப்பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “ஸ்டெப்-அப்” (Step-Up) தொடர்பாடல் திட்டம். 2027 ஆம் ஆண்டளவில் தீவு முழுவதுமுள்ள அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் 19,000 ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குதல். முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயல் திட்டம் 2025 – 2029.ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல குறைபாடுகள் உள்ள சிறிவர்களுக்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து ஆண்டு கால திட்டம். போன்ற நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் விளக்கமளித்தார்.
இலங்கையில் உள்ள ‘பராமரிப்பாளர்’ (Caregiver) என்பவரை வெறும் ஒரு “உதவியாளராக” மட்டும் பார்க்காமல், சான்றிதழ் பெற்ற ஒரு தொழில் வல்லுநராக மாற்றுவதே எமது நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகின் வெற்றிகரமான அனுபவங்களை எமது கொள்கைகளுடன் இணைத்து, இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் பராமரிப்பாளருக்கும் பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதை எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதை இந்த சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தினார்.
இந் நிகழ்வில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் திருமதி அலியா ருஸ்டெமோவா, ட்ரிபிள் பாசிட்டிவ் பேரன்டிங் புரோகிராம் (Triple Positive Parenting Programme) தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போர்த்துக்கல் போவிஸ்டா பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி கதரினா மாகல்ஹேஸ் மற்றும் அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி ஆகியோரும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










