வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை மாதம் FARM TO GATE செயலியை அங்குரார்ப்பணம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
FARM TO GATE ஊடாக விவசாயிகளிடமிருந்து, நுகர்வோர் நேரடியாக தங்களுக்கு தேவையான உற்பத்திகளை மொத்தமாகவோ அல்லது சில்லறை விலையிலோ கொள்வனவு செய்ய முடியும். இதனூடாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உற்பத்தி பொருட்களை காலவதியாகும் முன்னர் விற்பனை செய்துக்கொள்ள முடிவதுடன், நுகர்வோரும் தரமான, புதிய உற்பத்திகளை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை FARM TO GATE ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
FARM TO GATE செயலியில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தரவுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், உற்பத்தி பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய இடம், உற்பத்திகளின் தரம், கையிருப்பிலுள்ள அளவு, விலை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த விடயங்கள் அனைத்தையும் துறைசார் திணைக்களங்களின் கிராமிய மட்ட அலுவலர்கள் மேற்பார்வை செய்ய உள்ளதோடு, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தவும் உள்ளனர்.
தற்போது உரிய சந்தைவாய்ப்பு இன்மையால் உற்பத்தியாளர்கள் பாரிய அளவில் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சிக்கலுக்கான தீர்வை வழங்கும் நோக்குடனேயே வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநரால் FARM TO GATE திட்டத்தை ஆரம்பிக்க பணிப்புரை விடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சு, கூட்டுறவு, கிராமிய அபிவிருத்தி, தொழிற்துறை, கால்நடை, உள்ளுராட்சி திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்த புதிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇