மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Batticaloa – Singing Fish) ஏற்பாட்டில், “வாழும்போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளில் காந்தி பூங்காவில் 25.01.2026 அன்று நடைபெற்றது.
லயன்ஸ் மண்டலத் தலைவர் (Zone Chairperson) லயன் S. சுபாஸ்கரன் தொகுத்து வழங்கிய நிகழ்விற்கு பாடுமீன் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் S. மனோகரன், MJF வரவேற்புரையை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
மாநகரத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்து உழைக்கும் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வெயில், மழை என எக் காலநிலையிலும் தளராது பணியாற்றும் இவர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பது சமூகத்தின் கடமையாகும் என்பதை லயன்ஸ் கழகம் இந்நிகழ்வின் போது வலியுறுத்தியது.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் K. லோகேந்திரன், PMJF / PMAF (மாவட்டம் 306 D10) ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி மாநகர ஆணையாளர், லயன்ஸ் மாவட்ட இரண்டாம் பிரதி ஆளுநர் லயன் T. ஆதித்தன், PMJF / PMAF / JP, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் சபை உறுப்பினர்கள், லயன்ஸ் கழகத் தலைவர்கள், அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது மாநகர தூய்மைப் பணியாளர்களின் சேவைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் பட்டயத் தலைவர் (Charter President) லயன் ஹென்றி தேவராஜினால் கனடாவிலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட சீருடைகளும் நிகழ்வின் போது தூய்மைப் பணியாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் செயலாளர் லயன் P. G. டேவிட், “ஒரு நகரின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் தூய்மைப் பணியாளர்களே.
அவர்களின் உழைப்பை அங்கீகரிப்பதன் மூலம் முன்மாதிரியான சமூகத்தை உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.
மாநகர முதல்வர் தனது உரையில், பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் இத்தகைய சமூகச் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கவை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாநகர ஆணையாளர் தனது உரையில், இவ்வாறான தொடர்ச்சியான சமூக சேவைகளின் மூலம் மட்டக்களப்பு மாநகர மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த பாடுமீன் லயன்ஸ் கழகம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது எனக் கூறினார்.
லயன்ஸ் மாவட்ட ஆளுநர் உரையாற்றுகையில், பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் செயற்றிட்டங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றும், எப்போதும் வித்தியாசமாக சிந்தித்து புதுமையான முறையில் செயல்படுத்தும் தனித்துவம் இக்கழகத்துக்கு உள்ளதாகவும், அந்த வகையில் இந்த கௌரவிப்பு நிகழ்வும் ஒரு சிறந்த முன்மாதிரி எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாநகர ஊழியர்கள் சார்பில் உரையாற்றிய ஒருவர், தமது தொழில்சார் வாழ்க்கை அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், நீண்டகால லயன்ஸ் மூத்த உறுப்பினர்கள் மூவரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில், திட்டத் தலைவர் (Project Chairperson)லயன் P. சடாட்சரராஜா, MJF / PMAF / JP வினால் நன்றியுரை வழங்கப்பட்டது.























இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










