இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையை ஆரம்பிக்க ஆரம்பகட்ட கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னெடுப்பில் அண்மையில் இடம்பெற்றது.

கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.

அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலர், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், கலை இயக்குநர்கள் சங்கம், ஒப்பனை கலைஞர்கள் சங்கம், சார்க் கலாசார நிலையம், திரைப்படக் கல்வி தொடர்பான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் திரைப்படத் துறைசார்ந்த நிபுணர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முன்வைத்தனர். இந்தப் பாடசாலையானது திரைப்படம் குறித்த அறிவை வழங்குவது மட்டுமன்றி, நடைமுறை ரீதியாக திரைப்படங்களை தயாரிக்கும் கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளைக் கொண்ட நிறுவனமாக அமைய வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப இதனைப் பேண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இத்தகைய பாடசாலையை நிறுவுவது குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி இதனை ஆரம்பிக்கவும், பின்னர் படிப்படியாக அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய திரைப்படப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரித்தல் மற்றும் ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடிப்படைப் பணிகளை முன்னெடுப்பதற்காக இதன்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம், இலங்கை மன்றக் கல்லூரி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் திரைப்படத் துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நிறுவப்பட்டது.

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் சீதா பண்டார, அரச திரைப்படத் துணைக் குழுவின் தலைவர் (கலாநிதி) செனேஷ் திஸாநாயக்க பண்டார, சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் (கலாநிதி) கௌஷல்ய குமாரசிங்க உள்ளிட்ட திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டனர்.

அத்துடன், இந்தப் பாடசாலையின் பாடத்திட்டம் உள்ளிட்ட கல்விச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக திரைப்படத் துறை நிபுணர்களைக் கொண்ட மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டது.

அத்துடன், தற்போது செயலற்ற நிலையில் உள்ள கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை (International Film Festival, Colombo) மீண்டும் இந்த வருடம் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கும், நீண்டகாலம் நிலையான முறையில் இவ்விழாவை முன்னெடுப்பதற்கும் தேவையான நிறுவனமொன்றை நிறுவுவதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான தலையீட்டை வழங்கத் தயாராக இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.

இதேவேளை, திரைப்படத் தயாரிப்புப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலையக வளாகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கொழும்புக்கு அருகில் பொருத்தமான ஓரிடத்தில் இதனை நிர்மாணிப்பதற்கான அவசியம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாநாயக்கார, (சட்டத்தரணி) சுசந்த தொடாவத்த, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாப்பலகம, சுகத் வசந்த டி சில்வா, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, உபுல் கித்சிறி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects